ஸ்மார்ட்போன் உலகின் ஜாம்பவானாக திகழ்ந்து வரும் ஆப்பிள் நிறுவனமானது இந்த ஆண்டு மூன்று ஐபோன்களை வெளியிட திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஒன்று இதுவரை வெளியானதிலேயே மிகப்பெரிய ஐபோனாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த 3 ஐபோன்களும் தற்போதைய ஐபோன் X அளவில் இருக்கும் என்றும் இதில் ஒரு மாடலின் விலை குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டு, சில சிறப்பம்சங்கள் அதற்கேற்ப வழங்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக தயாரிப்பு ரீதியிலான சோதனை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இவை அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

புதிய தகவல்கள் குறித்து ஆப்பிள் சார்பில் எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை. எனினும் இந்த திட்டங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் சமீபத்தில் வெளியிடப்பட்ட கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனிற்கு போட்டியாக பெரிய திரை மற்றும் அதிநவீன அம்சங்கள் நிறைந்த ஐபோன் இந்த ஆண்டு வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.